பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தரால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளை விடுவித்து பராமரிப்பதற்கான நிலையமொன்றை ஆரம்பிப்பதற்காக வீடு மற்றும் காணி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை விலை கொடுத்து விடுவித்து உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதே அவரது நோக்கமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பின்படி மல்வானை இல்லம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், குறித்த கோரிக்கையை கையாள்வது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக பிரேரணை அமைச்சின் சட்ட திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மல்வானை இல்லம் மற்றும் காணி தொடர்பில் நீதி அமைச்சு தீர்மானம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்தினால் நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மல்வானை இல்லத்தை அவதானித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.