சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு முதல் பதிப்பில் வெற்றி பெற்ற பிறகு, இரண்டாவது பட்டத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. அதற்காக சிறந்த வீரர்களை கொண்ட அணி தெரிவுசெய்யப்படவுள்ளது.
இந்திய அணி இறுதியாக 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. அதன் பின்னர் எந்தவொரு ஐசிசி கிண்ணத்தையும் வெற்றிகொள்ள முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகின்றது.
இதனால் ஒரு வலிமையான அணியை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் சபை உறுதியாக உள்ளது.
இதன்படி, 2023 ஒரு நாள் உலகக் கிண்ண தொடரில் இந்திய அணியில் இடம்படித்த பல வீரர்கள் எதிர்வரும் டி20 உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில்,
1. ஷுப்மான் கில்
இந்தியாவின் இளம் மற்றும் திறமையான வீரரான சுப்மன் கில் 2023 ஒருநாள் உலகக் கிண்ண இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். எனினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருவதால் சுப்மன் கில் டி20 உலகக் கிண்ண அணியில் இருந்து தவிர்க்கப்படலாம்.
2. இஷான் கிஷன்
இஷான் கிஷன் 2023 ஒரு உலகக் கிண்ண இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாடினார். இருந்தபோதிலும், அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் அவர் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போயுள்ளது.
3. ஷ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 530 ஓட்டங்களை குவித்து துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தினார். இஷான் கிஷனைப் போலவே, ஸ்ரேயாஸும் இந்திய கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரும் டி20 உலகக் கிண்ணத்தை தவறவிட்டுள்ளார்.
4. முகமது ஷமி
முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக மாறியிருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டி20 உலகக் கிண்ணத்தை தவறவிட்டுள்ளார்.
5. ஆர்.அஸ்வின்
ஆர்.அஸ்வின் 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இருப்பினும், டி20 உலகக் கோப்பை 2024 அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவுள்ளன.
6. ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர் 2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் போது இந்தியாவுக்காக நான்கு போட்டிகளில் விளையாடியிருந்தார். எனினும், 2022 பெப்பிரவரி முதல் அவர் டி20 போட்டிகளில் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் அவரும் டி20 உலகக் கிண்ண அணியில் நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. பிரசித் கிருஷ்ணா
ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்தியாவின் ஒருநாள் உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. காயம் காரணமாக அவர் தற்போது ஒய்வெடுத்துள்ளார். எனவே அவரும் டி20 உலகக் கிண்ணத்தை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.