யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென உடல்நல குறைப்பாடுகளுடன் உடல் மெலிவு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , மாணவனுக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து மாணவனுடன் நெருங்கி பழகிய மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது , அவர்களுக்கும் காச நோய் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், தொடர்ந்து மாணவர்களை கண்காணித்து சிகிச்சை வழங்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆபத்தினை ஏற்படுத்தும் காசநோய்
இந்த காசநோய் பாதிக்கப்பட்ட நபரின் சளி, இருமல் வழியாக மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.
காசநோயால் பாதிக்கப்பட்ட நபரின் ஒவ்வொரு இருமலில் இருந்து வெளிப்படும் நீர் மில்லியன் கணக்கான தொற்றுநோயை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
காசநோய் நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை. அது பெரிதாக பெரிதாக எந்த உறுப்புகளை வேண்டுமானாலும் பாதிப்படையச் செய்யும். அது உங்கள் எலும்பு, மூளை, குடல் உறுப்புகள், நிணநீர் முடிச்சுகள் மற்றும் சருமம் என எல்லாவற்றிலும் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
எனவே காசநோய் அறிகுறிகளை சதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனே வைத்தியரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
காச நோய் பரவாமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை
1.இருமல், தும்மல் வரும்போது வாயைத் துணியால் மூட வேண்டும்.
2.காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து, அவர்களுக்குக் காசநோய் இருந்தால் முறையான, முழுமையான சிகிச்சை பெற வேண்டும்.
3.கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
4.அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியரை அனுகுங்கள்