”ராஜபக்ச குடும்பமே நாட்டை வங்குரோத்தாக்கியது” இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்து.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாபதியாக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக சந்திரிக்கா சதி செய்வதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெண் ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவைக் கூறலாம்.
சுமார் ஒரு தசாப்தமாக இலங்கைத்தீவை ஆட்சி செய்த ஒரு இரும்புப் பெண்மணி.
சந்திரிக்காவின் அரசியல் பயணம்
இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விளங்குகிறார்.
சுதந்திர கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த சந்திரிக்கா, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார்.
கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபாடு காட்டாது விலகியிருந்தார்.
இந்நிலையில், பரம்பரை வழி வந்த இவரது அரசியல் பயணம் மீண்டும் மிளிருவதற்கான அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல் களம்
இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பல அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதுடன், பல மேடைகளில் ஏறி தமது வாக்குகளை பலப்படுத்தும் திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தப் பின்புலத்தில்தான் மீண்டும் அரசியலில் களமிறங்கியுள்ளார் சந்திரிக்கா.
அவருடைய இந்த பிரவேசத்தின் முதல் வேட்டையாக சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை அதிரடியாக பதவி நீக்கியதில் ஆரம்பமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருடைய அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் பேசப்படும் விடயமாக மாறும் என்பது ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்திய பெருமை சந்திரிக்காவையே சாறும்.
தேர்தலையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்
ராஜபக்சர்களின் ஆட்சியில் திருப்தி காணாத சந்திரிக்கா மைத்திரியை வைத்து தனது அடுத்த அரசியல் நுணுக்கத்தை எடுத்துக்காட்டினார். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைய அவரும் முக்கிய பங்காளியாக இருந்தார்.
இவ்வாறு, ஒவ்வொரு முறையும் தனது அரசியல் நுணுக்கங்களால் அரசியலில் தம்மை நிரூபித்துக் கெபண்டிருந்த சந்திரிக்காவின் அடுத்த கட்ட நகர்வாக தற்போதைய அரசியல் பிரவேசம் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே, சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவைக் கூட்டிய சந்திரிக்கா, பதில் தலைவரை நியமித்துள்ளார்.
இலங்கைத்தீவின் மக்கள் அரசியலிலும் , பொருளாதாரத்திலும் பல மாற்றங்களை எதிர்ப்பார்த்து காத்திருக்ககும் இந்த தருணத்தில் ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளாராக வரப்போவது யார்? அடுத்த நொடி இலங்கை அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இலங்கை அரசியலின் தற்போதைய நிலை எனக் கேள்விக் கேட்டால் குழம்பிப் போகும் அளவுக்கான விடயங்கள் பல.
எவ்வாறாயினும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பல ஆட்சியாளர்களின் பின்னால் நின்று அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு வழி வகுத்தவர். இவரது இந்த மீள் பிரவேசம் அரசியலில் அடுத்த கட்ட நகர்வாகவே அரசியல் வட்டாரங்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.