சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கிடைத்தால், அகழ்வு பணிகளுக்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்..
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (11.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
நிண்டகாலமாக என் மீதான அவதூறுகளை பரப்பும் செயற்பாட்டில் தமிழ் கட்சிகள் செயற்படுகின்றன. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இவ்வாறான சேறு பூசல்கள் மூலம் என்னை துரத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனாலையே என்னை துரத்த முடியவில்லை என்ற நிலையிருக்கும்போது சில குடிகாரர்களால் என்னால் துரத்த முடியாது.
இதேவேளை பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு தொடர்பான திட்டம் நீண்ட காலத்திற்கு முன்னரேமுன்னெடக்கப்பட்ட திட்டம்.
அதுமாத்திரமல்லாது கடந்த கடந்த உள்ளூராட்சி தேர்தல் கால பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட அந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பொன்னாவெளியை சூழவுள்ள மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. அவற்றினை மக்களுடனான சந்திப்பின் ஊடாக கேள்வி பதில் முறையான கலந்துரையாடலை நடத்தவே குறித்த தினத்தன்று அங்கு சென்றிருந்தோம்.
குறிப்பாக சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையின் சாதக பாதக தன்மை தொடர்பிலான ஆரம்ப ஆய்வு பணிகளுக்கான 12 திணைக்களங்களை சேர்ந்தவர்களுடன் சென்ற போதே சில அரசியல்வாதிகளின் ஏவலாளர்கள் அன்றைய தினம் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்று அங்கு கதைக்க கூடிய நிலையில யாரும் இருந்திருக்கவில்லை. சிலர் தமது அரசியலுக்காக வந்திருந்தார்கள். மற்றையவர்கள் போதையில் நின்றார்கள். அதனால் அவர்களோடு கதைக்க முடியாது என திரும்பி வந்தேன். மீண்டும் செல்வேன். மக்களின் வாழ்வாதரத்திற்காக தொடர்ந்து பயணிப்போன்.
இதேவேளை சுண்ணக்கல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்குவதற்கான படிமுறைகள் உண்டு. அவற்றின் ஒரு கட்டமாகவே ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.
ஆய்வறிக்கையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டால் அகழ்வு நடவடிக்கைக்கான பணிகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000