சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களால் புதிய தொழிற்சாலைகள் அழிந்துபோவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் எச்சரித்துள்ளார்.
இரு நாட்டு உறவுகளைச் சீராக்கும் முயற்சியாக, கடந்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் முறையாக யெல்லென் சீனாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெய்ஜிங்கின் தொழிற்சாலை உற்பத்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்படி வலியுறுத்தும் நோக்கில் அவர், சீனப் பிரதமர், நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் போன்ற பலரையும் சந்தித்துப் பேசினார்.
தமது பயணத்தில், சீனாவின் மின்வாகனங்கள், மின்கலன்கள், சூரியசக்தித் தகடுகள் உள்ளிட்ட பசுமை எரிசக்திப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி வெகுவாக அதிகரிப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் ஆதரவால் அந்நாட்டில் உற்பத்தித் திறன் உள்நாட்டுத் தேவையைக் காட்டிலும் மிக அதிகமாக உயர்ந்திருப்பதாக யெல்லென் கூறினார்.
சீனாவிலிருந்து குறைந்த விலையில் பொருள்கள் இறக்குமதியாவதால் அமெரிக்காவிலும் இதர நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்றார் அவர். கடந்த காலத்தில் அமெரிக்க எஃகுத் துறை எதிர்கொண்ட சவால்களை அவர் சுட்டினார்.
“பத்தாண்டுகளுக்குமுன், சீன அரசாங்கத்தின் பேரளவு ஆதரவால் சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃகு உலகச் சந்தையில் குவிந்தது. அதனால் அமெரிக்கா உட்பட உலகெங்கும் தொழிற்சாலைகள் அழிவைச் சந்தித்தன” என்று யெல்லென் குறிப்பிட்டார்.
“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், நானும் அந்த நிலை மீண்டும் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன்,” என்றார் அவர்.
இருப்பினும் பொருளியல் தடைகள் உட்பட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் குறித்து அவர் மிரட்டல் விடுக்கவில்லை என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென்வின் இந்த கருத்துகள் தொடர்பில் சீனாவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கருத்தை எதிர்த்து சீனா சில அறிவிப்புகளை வெளியிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.