அதிகரித்து வரும் குடியேற்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பணி அனுபவ வரம்பை ஏற்படுத்துதல் போன்று மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறமையான தொழிலாளர்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படும் ஐந்து வருட கால எல்லையையும் மூன்று ஆண்டுகளாக குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெரும் வெற்றிடமாக காணப்படும் இடைநிலை ஆசிரியர் தொழிலுக்கு தேவையான திறமையான புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்ப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இதனிடையே, திறன் பற்றாக்குறை இல்லாத பணிகளுக்கு உள்நாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்வதாகவும் குடிவரவு அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு, சுமார் 173,000 பேர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்திற்கு அருகாமையில் உள்ள நாடான அவுஸ்திரேலியாவும் புலம்பெயர் தொழிலாளர்களினால் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
அங்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்தவர்களை நாடு கடத்தும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் நாட்டிற்குள் உள்வாங்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையை பாதியக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.