யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தமை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் தமிழர்களிடையே பல்வேறு விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.
தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுடன் தமிர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கைகோர்க்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகளின் கூட்டங்களிலும் அவர்களது அழைப்பின் பேரில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதிக்கு ஆதரவாக செய்யப்பட்டு வரும் சுமந்திரன் இலங்கை தமிழரசு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து பயணிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வாறு அன்றி வேறு எவருடனும் இணைந்து பயணிக்க தயாரில்லை எனவும், அப்படி எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணியுடன் மாத்திரமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு எவர் முன்வருகின்றபோதிலும் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.