கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட கட்டாய தகன (ஜனாசா தகனம்) நடவடிக்கைக்காக அரசாங்கத்தை முறையாக மன்னிப்பு கோரவைக்கும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் தகனம்’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர் என தெரிவித்த ஜீவன் தொண்டமான் மன்னிப்பும் பொறியிருந்தார்.
இந்த நிலையிலே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஜீவன் தொண்டமானின் மன்னிப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அமைச்சரவையினால் மன்னிப்பு கோரப்பட்ட வேண்டுமெனவும், இந்த நடவடிக்கையானது வாக்குகளை பெறுவதற்கான வியூகமாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உயிரிழப்பவர்கள் அனைவரும் தகனம் செய்யப்பட வேண்டுமென தெரிவித்து, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் புதைக்கப்படும் நிலையில், நீரின் வழியாக தொற்று பரவும் எனவும், நிலத்தடி நீர் மசுப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சடலத்தை அடக்கம் செய்வது பாதுகாப்பானது என சுட்டிக்காட்டி, சடலத்தை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இந்த நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் சுமார் 300 பேரின் சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நாம் தொடர்புகொண்ட போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.
வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாற்றியமைக்கப்பட்ட போதிலும், அடக்கம் செய்வதற்கு ஓட்டமாவடியில் இடம் வழங்கப்பட்டது.
இதன்படி, ஓட்டமாவடியில் 3,634 பேர் அடக்கம் செய்யப்பட்டதாக உள்ளூராட்சி சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.