போலியான ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (06) பிற்பகல் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் விமான அனுமதியை முடித்துக்கொண்டு புறப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலே, அந்த இளைஞன் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இளைஞனின் பயணப் பையை சோதனைக்குட்படுத்திய போது உண்மையான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, அந்த இளைஞன் போலியான கடவுச்சீட்டை இலங்கையில் உள்ள இத்தாலி தூதரகத்திற்கு அனுப்பி வதிவிட விசாவை பெற்றுக்கொண்டுள்மை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இளைஞன் இத்தாலி சென்றவுடன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட தரகருக்கு 95 இலட்சம் ரூபாவை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.