தமிழரசுக் கட்சிக்கு எதிராளியான சுமந்திரன்

இலங்கைத் தீவில் தமிழர் அரசியலில் யுத்தத்திற்கு பின்னரும் அதற்கு முந்தைய ஒரு தசாப்தகாலமும் செல்வாக்குச் செலுத்திய அல்லது தீர்மானமிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்ந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் செயல்பட்ட இரா.சம்பந்தன் செயல்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியதால் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு அதன் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தனிவழியில் சென்றுவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம்

இன்று கூட்டமைப்பில் எஞ்சியிருக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். ரெலோ, புளாட், ஈரோஸ் ஆகிய கட்சிகள் தனிவழியில் அதன் அரசியல் நகர்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்தக் கட்சிகள் தனிவழியில் செல்ல இரண்டு பிரதான நபர்களாக இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை அடையாளப்படுத்துகின்றன.

இவர்கள் இருவரதும் ஆதிக்கம் மற்றும் தன்னிச்சையான போக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என பங்காளி கட்சிகள் கடந்த காலத்தில் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது

இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தமிழ் தேசிய அரசியல் களத்தில் வலுவாக இயங்கும் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து பெப்ரவரி 26ஆம் திகதி கட்சியின் தேசிய சபை கூடியதுடன், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் புதிய பொதுச் செயலாளராக ச.குகதாசன் தெரிவுசெய்யப்பட்டதாக கட்சியின் தலைவரால் அறிவிக்கப்பட்டது.

என்றாலும், இந்த தெரிவு செல்லுப்படியாகாது என ஒரு தரப்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின் போது தலைவராக செயல்பட்ட சிறிதரன், தலைவராக தொடரவும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீதான விசாரணை இடம்பெற்றது. சுமூகமாக தீர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பிரச்சினை முடிவை விரைவில் எட்ட முடியாதளவு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது

நேற்றைய தினம் வழக்கில் எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பியான யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் முன்னிலையானார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,

இன்றைய வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த வழக்கு தொடர்பில் தமது ஆட்சேபனையைச் சமர்ப்பணமாக எழுத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

”சில விட்டுப்புக்கொடுப்புக்களைக் கொடுத்து, கட்சியை நிமிரச் செய்வதற்காகச் சில விடயங்களைக் கடந்த தவணையின்போது நாம் முன்னெடுத்தோம். நாம் எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது.

இன்று யாராவது எதிராளி வந்து ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்திருந்தால் வழக்கு முடிவடைந்து இருக்கலாம். ஆகவே, எதை நாம் எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது. அது மிகவும் கவலைக்குரிய விடயம். எதிர்வரும் 24ஆம் திகதி நாம் ஆட்சேபனை சமர்ப்பிக்க வேண்டும். அதைச் சமர்ப்பிப்போம்.” – என்றார் தவராசா.

ஒருமித்த அரசியல் கோரிக்கைகளை இவர்களால் முன்வைக்க முடியாதுள்ளது

தமிழர்சுக் கட்சி ஒரு தலைவர் இல்லாத கட்சியாக செயல்படுவதால் உத்தியோகப்பூர்வமான எந்தவொரு பேச்சுகளிலும் கலந்துகொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சிறிதரன் ஒருபுறமும் சுமந்திரன் ஒருபுறமும் தனித்தனியாக நிகழ்வுகளில் பங்கு பற்றி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்வொன்றில் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டிருந்தமை பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

தமிழர் அரசியல் எந்த திசையில் பயணிக்கிறது? இவர்களது எதிர்ப்பார்ப்பு என்ன? தென்னிலங்கையில் இவர்களது அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைய போகிறதென்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

வடக்கு, கிழக்கில் இயங்கும் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், சிவில் அமைப்புகளும் பல்வேறு திசையில் பயணிப்பதால் ஒருமித்த அரசியல் கோரிக்கைகளை இவர்களால் முன்வைக்க முடியாதுள்ளது.

ஒரு தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும்

இலங்கைத் தீவில் பிரதான தேர்தலொன்று நெருங்கிவரும் சூழலில் தமிழர் அரசியல் வலுவிழந்து செல்லுமானால் அது தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கு சாதகமானதொரு விடயமாகவே அமையும்.

தமிழர் அரசியல் வலுவிழந்தால் சர்வதேச அழுத்தம் குறையும். இதனால் காணாமல்போனாரின் விவகாரம், அரசியல் தீர்வு, காணி பிரச்சினை உட்பட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சர்வதேசத்திடம் வழங்கும் வெறும் வாய்மூலமான உத்தரவாதங்கள்கூட வழங்கப்படாத நிலைமை உருவாகும்.

”தமிழரசுக் கட்சிக்குள் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும். அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்று ஒரு தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும்.” என்பதுதான் அக்கட்சியை நேசிக்கும் மற்றும் தமிழர் அரசியலின் ஸ்திரத்தன்மையை விரும்புவர்களது எதிர்ப்பார்ப்பு.

Recommended For You

About the Author: admin