சஜித் – அனுர விவாதம்: ஒளிபரப்ப மூன்று தொலைக்காட்சிகள் மும்முரம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அனுரகுமார திஸாநாயக்கவுடனான பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பகிரங்க விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அண்மையில் அழைப்பு விடுத்தது.

இது தொடர்பில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊடக சந்திப்பு ஒன்றின்றில் கருத்து தெரிவிக்கும்போது, சஜித் பிரேமதாசவுடன் நேரடி விவாதம் நடத்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தயாராக இருக்கிறார். விவாதத்திற்கு சஜித் பிரேமதாச தயாரா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சுனில் ஹந்துன்நெத்தி விடுத்த பகிரங்க விவாத சவாலை ஏற்றுக்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாகவும் கூறினர்.

அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறும் சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

“தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விவாதம் நடத்துவது நல்லதொரு நகர்வாகும். அதன் மூலம், அவர்களின் கொள்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.” என்றும் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க உடனான விவாதத்திற்கு தயார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவாதத்தை ஒளிபரப்புச் செய்ய சிரச, ஹிரு, தெரண ஆகிய தொலைக்காட்சிகளிடையே போட்டிகள் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த மூன்று தொலைக்காட்சிகளும் இருதரப்பிடமும் தாம் இந்த விவாதத்தை ஒளிபரப்புச் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த விவாதத்திற்கு சஜித் பிரேமதாச தயார் என பொது வெளியில் கூறியுள்ள போதிலும் இன்னமும் அனுரகுமார திஸாநாயக்க எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin