ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய மருதானை பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது அடிப்படை உரிமை மீறல் என பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, கடிதம் மூலம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்திற்கு பின்புறம் உள்ள கட்டிடத்தில் இரகசியமான முறையில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சியின் முக்கிய ஆவணங்கள் மாயம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்த மிக முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு குழறுபடிகள் ஏற்பட்டுள்ள பின்னணியில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
செயற்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம்
இதனிடையே, கடந்த 30 ஆம் திகதி கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
அத்துடன், அந்தப் பதவிகளுக்கு வேறு நபர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவை அவசரமாக கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.