பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள எல்லைப் படை அதிகாரிகள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
பணி நிலைமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
எனினும், குறித்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது மற்றும் வணிக சேவைகள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
குடிவரவு கட்டுப்பாடுகள் மற்றும் கடவுச்சீட்டு சோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், பணி நேர முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
“வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் பிரச்சனையை தீர்க்க உள்துறை அலுவலகத்திற்கு வாய்ப்பு” கிடைத்துள்ளதகா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.