ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம்

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் – நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

ஆரம்ப பாடசாலைகளுக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை மற்றும் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரது யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம் (29.03) வருகைதந்த குறித்த கல்விச் சமூகத்தினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிரந்த நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் –
இதுவரைகாலமும் தரம் 6 இக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கே உடற்பயிற்சி ஆசிரியர் பதவிநிலையும் நியமனங்களும் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேநேரம் ஆரம்ப பாடசாலைகளிலும் “செயற்பட்டு மகிழ்வோம்” என்ற தொனிப்பொருளில் விளையாட்டு நிகழ்வுகள் வருடா வருடம் நடைபெற்று வருகின்றன. ஆனால் அப்பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களது பதவிநிலை இன்மையால் துறைாசார் அசிரியர்கள் நியமனம் இல்லாதுள்ளது.

இதனால் ஆரம்ப நிலை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே உடற்கல்வியின் அவசியம் தொடர்பில் துறைசார் பயிற்சிகள் இன்றி இருப்பதுடன் தத்தமது பாடசாலைகளில் இடம்பெறும் “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வுகளுக்கும் அயல் பாடசாலைகளிலிருந்து துறைசார் ஆசிரியர்களை கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையை நிவர்த்தி செய்தகொள்வது அவசியமாக இருக்கின்றது. எனவே ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் பதவிநிலைகளை உருவாக்கி நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்..

கோரிக்கையின் அவசியம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin