அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்று சுமார் 20 மணித்தியாலங்கள் ஆகின்ற நிலையில், மீட்பு பணிக்காக செலவிடப்பட்ட காலம் மற்றும்
நீரின் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்க கடலோர காவல்படை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான 27 நாட்கள் பயணத்தை ஆரம்பித்த சரக்கு கப்பல், துறைமுகத்தை விட்டு வெளியேறிய பின்னர் அதன் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு வேளை என்பதுடன், மின் இணைப்பு முற்றாக தடைப்பட்ட நிலையில் கப்பல் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கட்டுமானப் பணியாளர்கள் எட்டு பேர் நீரில் முழ்கிய நிலையில், இருவர் மீட்கப்பட்டு மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையிலே, காணாமல்போன ஏனைய ஆறு பெரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனிடையே, இடிந்த பாலத்தை மீண்டும் அமைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நிதி வழங்க வேண்டுமென ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியினை வழங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு காங்கிரஸிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.