அனுரவை சாடும் தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாவிக்கரையில் நேற்று (26) செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் இணைத்த வடகிழக்கை நிரந்தரமாக பிரித்தவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ;

”கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு கருத்தையும் முன்வைக்காமல் தாம் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளையும் சோறு தருவேன் என கூறியுள்ளார்.

நாட்டில் 1970, 1971, 1988, 1989 காலகட்டங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்திய அமைப்பான ஜே.வி.பி. இலங்கையில் நடைபெற்ற அகிம்சை ஆயுத போராட்டங்களை அறியாமல் இருந்திருக்க முடியாது. அப்படி இருந்துகொண்டு தாம் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை சோறு தருவேன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதாயகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை. அதேவேளை இந்த நாட்டிலே ஒரு இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் ஜே.வி.பி.யை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள். ஆயுத போராட்டத்திற்கு ஒரு தீர்வாக அதன் ஆரம்ப புள்ளியான 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையைகூட வழங்க கூடாது என கிளர்ந்து எழுந்தது மாத்திரமல்ல 13 ஆவது திருத்த சட்டத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கை மகிந்த ராஜபக்ஷவின் ஆசியுடன் 2006 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடி இரண்டாக நிரந்தரமாக பிரித்தனர் என்பதை மறந்துவிடவில்லை.

தமிழ் மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்றால், பிரச்சாரம் செய்ய வேண்டுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கின்றார்கள் என்பதை வைத்து அவர்களுடன் எந்த விதமான உறவையும் கொண்டிருக்கலாம்.

இரண்டு கிழமைக்கு முன்னர் நாடாளுமனற கட்டிடத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது சம்மந்தமாக சந்திப்புகள் இடம்பெற்றன. அதில் பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்றனர். எங்களை பொறுத்த மட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தால் பொலிஸ் அதிகாரம் உட்பட அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் பகிரப்பட்டு அமுல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்துவது பொலிஸார். அவர்கள் மாகாணத்தின் கீழ் இருந்தால்தான் குறித்த மாகாணங்களில் நடைபெறும் நீதிமன்றினால் எடுக்கப்படும் ஆணைகளை அவர்கள் நிறைவேற்ற கூடியவர்களாக இருப்பார்கள்.

இதற்கு நல்ல ஒரு உதாரணம் குருந்தூர்மலை தொடர்பாக நீதிமன்றம் கொடுத்த ஆணையை மத்திய அரசிலுள்ள பொலிஸார் நடைமுறை படுத்தாமை.

அதேபோல மகாவலி அதிகார சபைக்கு நீதிமன்றம் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு அதிதுமீறி துன்புறுத்துபவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது.

ஆனால் பொலிஸார் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாகாணசபை நன்றாக இயங்கவேண்டும் என்றால் பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்தையும் வழங்கவேண்டும் என்பதை மிகவும் உறுதியாக இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin