மாணவர்களுக்கு உணவளித்த ஜனாதிபதி

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin