மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் மைதானத்துக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெற்றிருந்தது.
போட்டியை காண சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மும்பை அணியின் தலைவர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கோசமிட்டனர்.
அத்துடன், சமூக ஊடகங்களிலும் அவர் ட்ரோல் செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு பருவங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்பட்டார்.
எனினும், இம்முறை மும்பை அணிக்கு திரும்பிய அவர் அந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது மும்பை அணிக்கு ஐந்து முறை கிண்ணத்தை வென்றுகொடுத்த ஷர்மாவின் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது.
எனினும, வணிகம் மற்றும் தொழில்முறை என்ற பெயரில் பாண்டியாவின் ரசிகர்கள் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே நேற்றையப் போட்டியின் போது மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தடிய குஜராத் டைட்டன்ஸ் 168 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும், அந்த அணி பந்து வீசும் போது சிறப்பாக செயற்பட்டு வெற்றியையும் தனதாக்கிக் கொண்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது 36 பந்துகளுக்கு 48 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஏழு விக்கெட்டுகளும் மீதமிருந்தன.
இருப்பினும், குஜராத் அணியின் ரஷித் கான், மோஹித் ஷர்மா மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.