ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டமாகும்.
என்றாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் நோக்கமும் இலக்கும் ஆகும்.
அதற்காக நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றனர்.
பொதுத் தேர்தலை விரும்பும் பொதுஜன பெரமுன
அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் ஓய்வெடுத்த பசில், கடந்தவாரம் தாயகம் திரும்பியிருந்தார். தாயகம் திரும்பியதும் அவர் நடத்திய முதல் சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவுடனாகும்.
இதன்போது எதிர்காலத்தில் நடத்தப்பட வேண்டிய முதல் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பசில் கலந்துகொண்ட சில ஊடக நேர்காணல்களிலும் பொதுத் தேர்தலையே பொதுஜன பெரமுன விரும்புவதாக தெரிவித்தார்.
தீர்மானமொன்றை நிறைவேற்ற உத்தேசம்
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் பசிலுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பில் பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானமொன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கைகளும் பசிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
விரைவில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றுகூடி பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானத்தை எடுக்க உள்ளனர்.
இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றவும் அவர்கள் உத்தேசித்துள்ளனர்.
ரணில் ஜனாதிபதி வேட்பாளர்
பொதுத் தேர்தலை நடத்த ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் யோசனையொன்றையும் பொதுஜன பெரமன முன்வைக்க ஆலோசித்துள்ளது.
குறித்த யோசனையின் பிரகாரம் பொதுஜன பெரமுனவின் தலைமையில் உருவாகும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை அறிவிக்க அக்கட்சி உத்தேசித்துள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.