ஜனாதிபதித் தேர்தல்: ரணில் வகுக்கும் வியூகம்

நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை (Caretaker Government) அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென ராஜபக்ச தரப்பு அழுத்தம் கொடுத்திருந்தபோதும் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார்.

இதனாலேயே ராஜபக்சவுடனான உறவைத் தொடர முடியாத இக் கட்டான சூழல் ரணிலுக்கு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.

சட்டச் சிக்கல்கள்

இப்பின்னணியிலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைத்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணில் திட்டமிட்டுவருகிறார் போலும்.

இது பற்றிய சட்டச்சிக்கல்கள் குறித்துத் தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளுடன் ரணில் கலந்துரையாடியிருக்கிறார்.

மேலும் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

ரணிலின் இந்த முடிவு உறுதியானால் அடுத்த இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாக ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்களும் கூறுகின்றன.

காபந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என்றால், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை ரணில் அறிவிப்பார் என்றும் மற்றுமொரு தகவல் கசிந்துள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு

ஆனால் பதவிக் காலம் முடிவதற்குச் சில மாதங்கள் இருக்கும் நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாதெனக் குறிப்பிட்டு எவரேனும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாத நிலைமை ஏற்படும்.

அத்துடன் அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிவடையும் வரை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பதவி வகிக்கும் நிலையும் ஏற்படலாம்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ரணிலின் பிரதான இலக்கு.

அந்த இலக்கை நோக்கி நகர எந்தவொரு அரசியல் சவால்களையும் எதிர்கொள்ள ரணில் தாயராக இருக்கிறார், தயார்படுத்தி வருகின்றார் என்பது தெரிகிறது.

அதேநேரம் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென்றே விரும்புகின்றது. ஆனால் காபந்து அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதென்ற ரணிலின் வியூகங்கத்தை ஏற்கத் தயாராக இல்லை.

சஜித் அணி

ரணில் வகுக்கும் வியூகங்கள் தொடர்பாக சஜித் அணி தீவிரமாகப் பரிசீலிக்கிறது. ரணிலின் எந்தவொரு முடிவுக்கு எதிரான சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கின்றது.

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி பிரதான அரசியல் கட்சிகளின் வியூகங்களை அவதானித்து நாடாளுமன்றத்தில் தமது ஆசனங்களை அதிகரிப்பதறகான மக்கள் சந்திப்புக்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அனுரகுமார திஸாநாயக்க தயாராகவே இருக்கிறார் என்பதை அவரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

Recommended For You

About the Author: admin