ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி வரிசையில் அமர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை காரணமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுன எடுக்கும் இந்த முடிவுக்கு எதிராக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்களில் எவருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்காதிருப்பது குறித்தும் பொதுஜன பெரமுன கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர ஏற்கனவே சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் அந்த எண்ணிக்கையானது 40 உறுப்பினர்கள் வரை உயரும் எனவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தற்போதைய சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்வது குறித்து எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட போகும் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கட்சி தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் சிலருக்கு முதலில் பொதுத் தேர்தல் அவசியமாக இருப்பதாக காணமுகிறது எனவும் அவர்கள் தவறாக தகவல்களை பரப்பி நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.