சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் ஆண்டுக்கான ஆங்கில மொழி இறுதிப் பரீட்சையை இரத்து செய்ய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த வினாத்தாள் மீள வழங்கும் திகதி எதிர்காலத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு ஆங்கில மொழித் தேர்வின் இரண்டாம் பாகம் என்று கூறப்படும் வினாத்தாள் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தன
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியேறிய சம்பவமும் நேற்று பதிவாகியுள்ளது.
மேல்மாகாண பாடசாலைகளில் 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான விஞ்ஞான பாடம் தொடர்பான வினாத்தாள் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.
மேல்மாகாண பாடசாலைகளில் வரலாறு பாடம் தொடர்பான வினாத்தாள்களும் நேற்று முன்தினம் முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்திருந்தது.
இதனால் மேல்மாகாணத்தில் அனைத்து பாடங்களுக்கான தவணைப் பரீட்சைகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விவசாய விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் கசிவு
கடந்த மாதமளவில் விவசாய விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் இணையத்தில் கசிந்திருந்தது. இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்வி வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரகசியமாக வெளியாகும் பரீட்சை வினாத்தாள்கள்
கடந்த சில மாதங்களாகவே பல பரீட்சைகளுக்குரிய வினாத்தாள்கள் இரகசியமான முறையில் வெளியான நிலையிலேயே இருந்து வருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அதிகமாக கவனம் செலுத்துவது அவசியமாகும்.