இங்கிலாந்து இடைத்தேர்தலில் இடதுசாரி தலைவருக்கு வெற்றி

இங்கிலாந்தில் நடந்த இடைத்தேர்தலில் மூத்த இடதுசாரி தலைவர் வெற்றிப்பெற்றுள்ளார்.

30 வீதமான சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட வடக்கு இங்கிலாந்தின் ரோச்டேல் தொகுதியில் விளிம்புநிலை தொழிலாளர் கட்சியின் தலைவரான 69 வயதான ஜோர்ஜ் காலோவே (George Galloway) 40% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தொகுதி பாரம்பரியமாக தொழிற்கட்சி வெற்றி பெற்ற தொகுதியாகும்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரசாரம்

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்த்தும்,பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியும் ஜோர்ஜ் காலோவே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியையும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

அக்டோபர் 7 நடத்த ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலுக்கு தெரிந்ததே நடந்தது என இந்த தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட அசார் அலி குற்றம் சாட்டிய வீடியோ வெளியானதை அடுத்து, தொழிற்கட்சி அவருக்கான ஆதரவை திரும்பபெற்றது.

சுயேச்சை வேட்பாளரான டேவிட் டுல்லி இரண்டாமிடம் பிடித்தார். கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்தை பிடித்தார். அசார் அலி நான்காவது இடத்தைப் பிடித்தார்.

ஜோர்ஜ் காலோவே தீவிர இடதுசாரி தலைவர்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானிய அரசியலில் தீவிர இடதுசாரி தலைவராக பிரவேசித்த காலோவே, கிளாஸ்கோ தொகுதியில் இருந்து தொழிற்கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

2003ல் கட்சியை விட்டு வெளியேறிய அவர் ஏழாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது 2012 க்குப் பின்னர் அவருக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.

பிரித்தானியாவில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரி தலைவர் ஒருவர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin