இலங்கையின் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
55 ஆவது மனித உரிமைகள் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இந்த நியமனம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 2010 ஆம் ஆண்டு நபரொருவர் சித்திரவதை செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னரே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு துறையில் வலுவான மறுசீரமைப்பு அவசியம் எனவும் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தார்.
அரசியலமைப்பின் 41c.(1) மற்றும் 61e.(b) விதிகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரமும் கிடைத்தது.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சில தரப்பினால் தேசபந்துவின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த பிரேரணைக்கு அரசியலமைப்பு பேரவை வாக்களித்ததாகவும், ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்த நிலையில், இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசியலமைப்பு சபையில் தீர்மானம் எடுப்பதற்கு ஐந்து வாக்குகள் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சபாநாயகர் வாக்களிப்பார் எனவும், இரண்டு மற்றும் நான்கு வாக்குகள் சமநிலை அல்ல என சுட்டிக்காட்டிய சஜித் இதன்படி, அரசியலமைப்பு முற்றாக மீறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.