பொதுத் தேர்தலை கோரும் ராஜபக்ச தரப்பு: நெருக்கடியில் ரணில்

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமான நடைபெறும் என ஜனாதிபதியும் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை வருகிறார் பசில்

தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளன.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.

அத்துடன், கட்சியில் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகளும் முற்றியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன எந்தவொரு அவசர முடிவையும் எடுக்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மார்ச் 5 ஆம் திகதி இலங்கை திரும்ப உள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக பிரசாரம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில ஆய்வுகளை அவர் அமெரிக்காவில் இருந்தவண்ணம் நடத்தி வருவதாகவும் இதன் முடிவுகளையே தேர்தல் உத்திகளாக பயன்படுத்த உள்ளதாகவும் அறிய முடிகிறது.

இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிய வருகிறது.

பொதுஜன பெரமுனவுக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிளவுபட்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவை முழுமையாக ஆதரித்து, தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டனர்.

பொதுத் தேர்தலை விரும்பும் பொதுஜன பெரமுனவினர்

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மற்றொரு பிரிவினர் அமைச்சுப் பதவிகள் இல்லாது அரசாங்கத்தில் உள்ளனர். இவர்கள் ரணில் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் அக்கட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதில் பொதுஜன பெரமுன பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதால் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை இத்தருணத்தில் நடத்துவதையே விரும்புகின்றனர்.

அதற்கான அழுத்தங்களையும் கட்சியின் உள்ளக மட்டத்தில் கொடுத்து வருவதால் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிய வருகிறது.

Recommended For You

About the Author: admin