வெளிநாட்டவர்களுக்கு மலேசியா வழங்கியுள்ள பொது மன்னிப்பு

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது விசா இல்லாமல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது .

விசா மோசடியால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்,இந்தியர்கள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு நிவாரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்டத்தை மீறி மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மார்ச் 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேற முடியும்.

சொந்த நாட்டிற்கு புறப்படுவதற்காக விமானப் பயணச்சீட்டு, அசல் கடவுச்சீட்டு என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக, கடவுச்சீட்டை இழந்தவர்கள் அவசரச் சான்றிதழுக்காக தமது நாடுகளின் தூதரகங்களை அணுகலாம்.

வருகையாளர் விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட பலர்

வருகையாளர் விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் பலர் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு ஆவணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேற சிறை தண்டனை அல்லது பெரும் அபராத தொகையை செலுத்த வேண்டியிருப்பதால் பொது மன்னிப்புக்காக காத்திருக்கின்றனர்.

மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பதினான்கு குடிவரவு அலுவலகங்களில் தற்போது பொது மன்னிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் குடிவரவு அலுவலகங்களில் முன்பதிவுகள் இல்லாமல் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ஐந்நூறு மலேசிய ரிங்கிட் அறவிடப்படுகிறது. இந்த கட்டணத்தை இலத்திரனியல் முறையிலும் செலுத்தலாம்.

இம்முறை அறவிடப்படும் பொது மன்னிப்பு விண்ணப்ப கட்டணம் குறைவாக உள்ளது.

2019 இல் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது, விண்ணப்பதாரர்களிடம் எழுநூறு மலேசிய ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin