ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் இராஜினாமா செய்வதாக பாலஸ்தீனப் பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தினை திங்களன்று அவர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் (Mahmoud Abbas) கையளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறை தீவிரம் மற்றும் காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி ஆகியவற்றின் பின்னணியில் மொஹம் ஷ்டய்யே இந்த முடிவினை எடுத்துள்ளார்.
அடுத்த பிரதமர் யார்?
ஆளும் கட்சியான ஃபதாவின் மத்தியக் குழு உறுப்பினரான ஷ்டய்யே 2019 முதல் பாலஸ்தீனப் பிரதமராக இருந்து வருகிறார்.
அவருக்குப் பதிலாக முன்னாள் துணைப் பிரதமரும், பாலஸ்தீனிய முதலீட்டு நிதியத்தின் தலைவருமான பொருளாதார நிபுணருமான மொஹமட் முஸ்தபா நியமிக்கப்படலாம் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அழுத்தம்
காசாவில் மோதலை நிறுத்த சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது.
போருக்குப் பின்னர் அந்த பகுதியை ஆளுவதற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் பணியைத் தொடங்கும் நிலையில், பாலஸ்தீன அதிகாரத்தை அசைக்க ஜனாதிபதி அப்பாஸ் மீது அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.