இயற்கை வளங்களால் செழிந்து கிடக்கும் இலங்கை தீவில் பிறந்ததை எண்ணி மகிழ்வடையும் காலம் போய் நாளுக்கு நாள் அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய வகையிலான சம்பவங்களே அதிகரித்து வருகின்றன.
எண்ணிலடங்காத மரணங்கள் , விபத்துகள் , கொலைகள் , குற்றச்செயல்கள் என்பன நாட்டின் பல இடங்களிலிருந்தும் பதிவாகி வருகின்றன.
ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகும். எனினும், இலங்கையராய் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் அவ்வாறானதொரு ஆரோக்கியமான வாழ்வு தற்போது கனவாகவே உள்ளது.
ஒரு புறம் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு , மருந்துகளின் திடீர் விலையேற்றம் , நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் , வைத்திய உபகரணங்களின் தட்டுப்பாடு , தரமற்ற மருந்து வியாபாரம் என வைத்திய துறையில் பல தரப்பட்ட பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் 40, 000 போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக நோயாளர்களின் வாழ்க்கையும் மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையின் திடீர் மரணங்கள்
குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்தமாற்று சிகிச்சை பிரிவில் நோயாளர்கள் சிலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏனைய நோயாளர்கள் குளியாப்பிட்டிய , நிகவெரட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளில் காணப்படக்கூடிய சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த மாற்று சிகிச்சை பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த மாற்று சிகிச்சை பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இவ்வாறான அசாதாரண மரணங்கள் எதுவும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெறாத நிலையில் குறித்த மரணங்களுக்கான காரணம் கிருமித் தொற்றா அல்லது ஏதேனும் இரசாயன தாக்கமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும் குறித்த மரணங்களுக்கான காரணம் இது வரையில் வெளிவரவில்லை. இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள இரு வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
திடீர் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சிலர் குருணாகலைக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.