தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான பிரிவுகளும் உட்கட்சி மோதல்களும், தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கடும்போக்குவாத்தைக் நகர்த்திச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்துவருகின்றது.
அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்கு 46 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இலங்கை சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை நாடுகளை தெளிவுபடுத்தும் முகமாக விசேட அரசியல் உயர்மட்ட குழு ஒன்று ஜெனிவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள் தமது பங்கிற்கு சந்திப்புக்களையும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தரப்பு தமக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. தென்னிலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்தான விடயத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.
ஆனால் தமிழ்த் தேசிய தலைவர்கள் கொள்கை முரண்பாடு என்று கூறிக்கொண்டு தமது கட்சி அரசிலை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் சிவில் அமைப்பினர் செயற்பட்டுக் கொண்டு இருந்தாலும் அவர்களினால் நாடுகளின் தலைவர்களை அணுகி பேச்சுக்களை நடத்த முடியாது. அரசியல்வாதிகளே இதனை கொண்டு செல்ல வேண்டும்.
2009 இற்கு பின்னர்……
2009 இற்கு பின்னர் காணப்பட்ட இலங்கை மீதான் சர்வதேச அழுத்தங்கள் குறைவடைந்து சென்று கொண்டிருக்கிறது.
அதேவேளை தாயகத்திலும் அந்த போக்கு குறைவடைந்து செல்கின்றது. மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக போராடும் உணர்வினை உயிரோட்டமாக பேணி அதன் மூலம் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி தேவையுள்ளது. ஆனாலும் அதனை யார் செய்வது என்ற வினா எழுந்துள்ளது.
ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு விடயத்தில் மழுங்கடிப்பு செய்யும் காரியங்களை தென்னிலங்கை மேற்கொண்டுவரும் நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் சுயநல போக்கு அதற்கு இன்னும் தூபம் இடுவது போல் அமைந்திருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.