நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து தமது வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்க அறிவுறுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76வது பிரிவு தொடர்பில் இந்தத் தகவல்களைத் திரட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாரேனும் ஒருவர் தற்போதைய வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் பிரிவை விட்டு வேறொரு பொலிஸ் பிரிவுக்கு உரிய பிரதேசத்துக்கு வசிப்பிடத்தை மாற்றும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பில் கிராம அதிகாரியின் பரிந்துரையுடன் முன்பு தகவல் வழங்கிய பொலிஸ் நிலையத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை வலியுறுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன் மூலம் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், குற்றங்களை ஒடுக்கவும் இலகுவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பொலிஸாரின் கிளியரன்ஸ் அறிக்கைகளை தாமதமின்றி வழங்குவதற்கு வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.