உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் எனக் ரிச்சர்ட் ஆர்.வர்மா கூறியுள்ளார்.
ரிச்சர்ட் ஆர்.வர்மா கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பார்வையிட உள்ளார்.
கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுவியை அமெரிக்கா வழங்கும் என ரிச்சர்ட் ஆர்.வர்மா, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தோ-பசிபிக் பங்காளிகள்..
இதேவேளை, ரிச்சர்ட் ஆர்.வர்மா, இலங்கையின் சிவில் சமூக அமைப்புகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
ரிச்சர்ட் ஆர்.வர்மா, தனது இலங்கை பயணத்திற்கு முன்னதாக, பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்குச் சென்றார்.
இந்தோ-பசிபிக் பங்காளிகளுடன் அமெரிக்காவின் ஒத்துழைப்பை இந்த பயணம் வலுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலைத்தீவுக்கான அவரது பயணத்தில் சீனாவுடான நெருங்கிய போக்கில் இந்தியாவை பகைத்துக் கொள்வது பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்பதுடன், இந்திய பெருங்கடலின் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது ஆபத்தானதாக இருக்கும் என ரிச்சர்ட் ஆர்.வர்மா, எடுத்துக் கூறியிருக்கக் கூடுமென இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
சீனாவின் “சியாங் யாங் ஹாங் 3” (Xiang Yang Hong 3) என்ற ஆய்வு கப்பல் நேற்று வியாழக்கிழமை மலைத்தீவு தலைநகரான மலோயில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதற்கு இந்தியா கவலை வெளியிட்டிருந்ததுடன், இந்திய பெருங்கடல் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு இராஜதந்திர நகர்வுகளிலும் புதுடில்லி ஈடுபட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடும் அழுத்தம் காரணமாகவே சீனாவின் “யுவான் வான் 5“ கப்பலின் கொழும்பு வருகையை இலங்கை இடைநிறுத்தியதுடன், எதிர்வரும் ஓராண்டுக்கு ஆய்வுக் கப்பல்களின் இலங்கை வருகைக்கும் தடைவிதித்தது.
இவ்வாறான பின்புலத்திலேயே இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் வெளிப்பாடு என்றே சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் கடந்தவாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.