ஈரான், ரஷ்யாவிற்கு சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வழங்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவுகணை உள்ளிட்ட 400 மேற்பட்ட அதிபயங்கர ஆயுதங்களை வழங்கவுள்ளது. இந்த ஏவுகணைகள் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையில் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
கடந்த ஆண்டின் இறுதியில் தெஹ்ரான் மற்றும் மாஸ்கோவில் ஈரான் மற்றும் ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னர் இவ்வாண்டு ஆரம்பம் முதலே ஏவுகணை ஏற்றுமதி ஆரம்பமாகியது என ஈரானிய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருபியன் கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் அணுவாயுத்திட்டத்திற்கு தடை
ஐ.நா பாதுகாப்புச் சபை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை ஏற்றுமதிகளுக்கு ஈரானுக்கு எதிராக தடை விதித்திருந்தது. இந்த தடையானது கடந்த வருடம் அக்டோபரில் நீக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தின் மீதான தடைகளைத் தக்கவைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஏவுகருவிகளை வழங்கியதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், வட கொரியாவிலிருந்து ஏற்கனவே பெறப்பட்ட ஏவுகணைகளுக்கு மேலதிகமாக, ஈரானிடம் இருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஆயுதங்களை ரஷ்யா கொள்வனவு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த ஏவுகணை விநியோகம் இடம்பெறுவதை ஈரான் மற்றும் ரஷ்ய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் 2023 இல் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பு
ஈரான் தனது முதலாவது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் (Hypersonic Ballistic) ஏவுகணையை கடந்த ஆண்டு தயாரித்தது.
“பத்தாஹ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மற்றும் ஈரானின் புரட்சிகர படைகளின் தளபதி ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர.
துல்லியமாக செயற்படும் “பத்தாஹ்” ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை கணித்து தாக்குதல் நடத்தும் அளவு சக்தி வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதுவரை உள்ள தொழிநுட்பங்களின் அடிப்படையில் உள்ள பாதுகாப்பு அரண்களை மீறி இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தும் அளவு வல்லமை கொண்டுள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும். “பத்தாஹ்” ஏவுகணையின் வேகம் மணிக்கு 14 நிலைகளை தாண்டியுள்ளது. அதாவது மணிக்கு 15,000 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும். அத்தோடு சிக்கலான பாதைகளில் கூட செல்லும் அளவு தொழிநுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பத்தாஹ்” ஏவுகணை ஏவுகணைத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சி, வளிமண்டலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களை நடத்தும் அளவு சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியிருப்பதாக ஈரான் அறிவித்திருந்தது.
பாலிஸ்டிக் ஏவுகணையின் ஆபத்து
ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் இஸ்ரேலின் “அயர்ன் டோம்”பாதுகாப்பு திட்டத்தால் கூட இந்த “பத்தாஹ்” ஏவுகணையை நிறுத்த முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
அத்தோடு சியோனிச கொள்கையில் ஆட்சி செய்யும் அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய ஆபத்து என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாரிய எதிர்ப்பையும் மீறி ஈரான் தற்காப்பு என்ற பெயரில் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது.
அமெரிக்க மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து முடங்கிப்போனமையும் உள்ளது.
இந்த நிலையில் நாடுகள் தமக்கிடையில் மனித உயிருக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் அணுவாயுதங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் காரியமானது மூன்றாம் உலக போருக்கு வழி ஏற்படுத்துமோ என்ற அச்சம் உலக தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன