இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதி இரு காலாண்டுகளில் அரசாங்கத்தின் இலக்கான 5 வீதத்தை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிகாரியொருவரின் தகவலை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை புதன்கிழமை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கடுமையான அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் 2022 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
அதன் பின்னர், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்ட உதவியுடன், அண்மைய மாதங்களில் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது.
இந்நிலையில் நடுத்தர காலத்தில் பணவீக்கம் 5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது மூன்றாம் காலாண்டில் இருந்து ஆண்டின் இறுதி வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறையின் பணிப்பாளர் எஸ்.ஜெகஜீவன் (S. Jegajeevan) ரொய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
வரி அதிகரிப்புகளின் உயர் அடிப்படை விளைவு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணவீக்கத்திற்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அது பண வீக்கத்தை 5% க்கும் குறைவாக கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசிய நாடு 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் மோசமான நிதி நெருக்கடியை சந்தித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்த பின்னர், 2022 மே மாதம் இலங்கை அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை IMF திட்டத்தின் கீழ் வருவாய் இலக்குகளை அடைவதற்காக அதன் பெறுமதி சேர் வரியை (VAT) 15% இலிருந்து 18% ஆக உயர்த்தியது.
இது அதன் பிரதான பணவீக்க விகிதத்தை உயர்த்தியது, அதனால் கடந்த டிசம்பரில் 4.2% ஆக காணப்பட்ட பிரதான பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5% ஆக உயர்ந்தது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய சட்டத்தின் கீழ் பணவீக்கத்தை 5% இல் பராமரிப்பதாக இலங்கை மத்திய வங்கி உறுதியளித்ததுடன், வரி உயர்வு, விலை அதிகரிப்பு இனியும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.