அரச பாடசாலைகளில் கடந்த மாதம் முதல் நீர் கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இதுவரை குடிநீருக்கான கட்டணம் அறவிடப்படாமலேயே மாணவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மாதாந்தம் 20 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்படும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மற்றும் கல்வி, கல்வி சாரா ஊழியர்களுக்கும் மாதம் 400 லீட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக குடிநீர் பயன்படுத்தப்படும் நிலையில், பாடசாலை நிர்வாகமே கட்டணத்தை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நீர் விநியோகம் இல்லாத பாடசாலைகளுக்கு புதிதாக நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும், மேலதிகமாக நீர் பயன்படுத்தப்படும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான விடுதிகள், நீச்சல் குளங்களுக்கு தனித்தனியாக நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான கட்டணத்தை குடியிருப்பாளர்களும், நீச்சல் குளங்களுக்கான கட்டணத்தை வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்தும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சுற்றுநிருபம் பெற்றோருக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையில், பாடசாலைகளில் பாரியளவில் வீண் விரயமாகும் நீரை முகாமைத்துவம் செய்யும் நோக்கிலே இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பாடசாலைகளில் நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாது எனவும், இந்த சுற்றுநிருபம் தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.