மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி என சுதந்திர மக்கள் காங்கிரசின் செயற்குழு உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.

பொது மக்கள், சம்பளத்தை உயர்த்துமாறு போராட்டங்களை நடத்தியும் அதற்காக பணம் இல்லை என அரசாங்கம் மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரசின் தலைமைக் காரியாலத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 73 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது , ஆனால் ஏனைய வைத்துறையின் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை .

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான 85 ரூபாவை 20 ரூபாவினால் அதிகரிக்க தம்மிடம் பணம் இல்லை என்று கூறிய திறைசேரி, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை காலவரையறையின்றி உயர்த்துவதற்கு பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை வேடிக்கையானது.”

என குணபால ரத்னசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தும் மக்களின் நடத்தை நியாயமானதா? என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் ஏழு இலட்சத்து 12 000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 75000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டவிரோத கொடுப்பனவை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin