பல்வேறு அரசியல் நோக்கங்களின் பகடைகாயாக மாறி தமது கட்சிக்கு அவதூறை ஏற்படுத்த வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடம் மிக கௌரவமான முறையில் கோரிக்கை விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக எனது இந்திய விஜயத்தின் பின்னர் நாட்டின் அரசியல் கட்சிகள் மிகவும் குழப்பமடைந்திருப்பது அதிசயமல்ல.
எனினும் அதில் நாட்டின் பிக்குமாரை பயன்படுத்தி வருவது பாரதூரமான பிரச்சினை என்பதுடன் அது பௌத்த தர்மத்திற்கு செய்யும் அவமதிப்பு.
இந்திய விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பணிகளுக்காக 300 கோடி ரூபா வழங்கப்பட்டது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
300 கோடி ரூபாவை இந்தியா வழங்கியது என்பது முற்றிலும் பொய்யானது.
இதனால், பௌத்த தர்மத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குமாரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு பொய்யான விடயங்களை காலத்திற்கு காலம் கொண்டு வந்து, சேறுபூசும் நடவடிக்கையானது எனது அரசியல் வரலாற்றில் பழகிப்போன ஒன்று” எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.