மத்திய மலைநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது.
அந்தவகையில் மவுஸ்ஸாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மவுஸ்ஸாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று காலை 13 அடி 5 அங்குலமாக குறைவடைந்து காணப்பட்டதுடன் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் சடுதியாக 8 அடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மவுஸ்ஸாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களிலிருந்து 06 மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மின் உற்பத்தியின் அளவும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
06 மின் உற்பத்தி நிலையங்கள்
தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான மவுஸ்சாகலை மற்றம் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து லக்ஷபான நீர்மின்சார அமைப்பின் கீழ் உள்ள லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன், பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் ப்ரோட்லேண்ட் ஆகிய 06 மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது.
எனவே மேற்குறித்த நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி குறைவடைந்து வருவதால் மின்சாரத்தினை சிக்கனமான பயன்படுத்துமாறு அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உப்புத் தடுப்பு திட்டம்
இதேவேளை நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை குறித்து கவலையடைந்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.
தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதுள்ள நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகிப்படும் எனவும் வலியுறுத்தியளார்.
இலங்கையின் நீர் ஆதாரங்களில் நீடித்த வறட்சியான காலநிலையின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலைமைகள் காரணமாக நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளாந்த மின் தேவை
தற்போது நிலவும் வறட்சியினால் நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் தற்போது நீர் மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன் காற்றாலை மூலம் 5 வீத மின்சாரம் உற்பத்தியாகின்றது.
அத்துடன் 64 வீத மின்சாரம் அனல் மின் உற்பத்தி மூலம் பெறப்படுகின்றது.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.