இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

1948 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இன அழிப்புக் குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஆறு விதமான குற்றங்களை காசாவில் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்ரேல் அரசுக்குரியது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி தென்னாபிரிக்கா மீண்டும் அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

தென்னாபரிக்காவின் கோரிக்கையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் அரசுக்கு உடனடி உத்தரவும் பிறப்பித்துள்ளது.

ஜனவரி 26 ஆம் திகதி வழங்கப்பட்ட தீப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் இன அழிப்புக்கான குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தாமல் இன அழிப்புப் போர் தொடருவதாகவும் ஆகவே மேலும் கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு தென்னாபிரிக்கா தனது அவசரக் கோரிக்கையில் கேட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான போரை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஒன்பதாம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று இஸ்ரேல் அரசின் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ரஃபாவில் பொதுவாக 280,000 பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். தற்போது அங்கும் இஸ்ரேல் அரசு போரை ஆரம்பித்துள்ளது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

காசா மக்கள்தொகையில் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்னாபிரிக்காவின் அவசர கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன அழிப்புக்கான குற்றங்கள் எதனையும் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்வதற்கு இஸ்ரேல் அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இஸ்ரேல் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் அர்த்தமுள்ள முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை ஆதாரங்களுடன் ஒரு மாதத்திற்குள் தனது நீதிமன்றின் முன் அறிக்கையிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அது மட்டுமல்ல குற்றங்கள் தொடர்பான தடயங்கள் எவற்றையும் அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் இஸ்ரேலுக்குப் பணிக்கப்பட்டிருந்தது.

“காசாவில் நடந்து கொண்டிருக்கும் போரில் இழைக்கப்படும் குற்றங்களை இன அழிப்பைத் தடுப்பதற்கான உலகளாவிய நீதிச் சட்டகத்தின் ஊடாக சர்வதேச நீதிமன்றம் கையாள வேண்டும்.

இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது விசாரிக்கப்படவேண்டியது என்றும் தென்னாபிரிக்கா முன்வைத்த வழக்கின் நியாயாதிக்கம் நம்பத்தகுந்ததாக இருப்பதாகவும் நீதிமன்றம் கருதி அதன் அடிப்படையில் இடைக்காலத் தடையுத்தரவுகளையும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin