யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்களை மேலதிக விசாரணைகளுக்காக, தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான அவகாசத்தை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து கடுவலை நீதவான் சானிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றத்திடம் இருந்து முறையான உத்தரவுகளை பெறவில்லை என தெரிவித்து பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்
இந்தநிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், கடுவலை பகுதியைச் சேர்ந்த வெலிவிட்ட சுத்தா என அழைக்கப்படும் மல்லேக சுதத் கித்சிறி, என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு ரக பேருந்துகள், நவீன ரக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் விசேட சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றபட்டமை குறிப்பிடத்தக்கது.