சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டுப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய ‘செயல் திட்டத்தை’ உருவாக்குகிறது.
சுவிட்சர்லாந்தில் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது, குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
வீட்டுத் தட்டுப்பாடு குறித்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இவ்வார ஆரம்பத்தில் சுவிஸில் இடம்பெற்றது.
இதன்போது பொருளாதார அமைச்சர் கை பார்மெலின், மண்டலங்கள் மற்றும் நகராட்சிகள், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
கட்டுமான அனுமதிகளை விரைவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை இதன்மூலம் கொண்டு வந்தார். பொதுவாக மக்களுக்கு வீட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், குறைந்த வாடகையுடன் கூடிய வீடுகள் கிடைப்பதற்குமான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் கலந்துரையாடப்பட்டு நன்கு திட்டமிடல் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் வீடு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
பெரு நகரங்களில் அதிளவான வாடகை தமது செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறும் புலம்பெயர் தமிழர்கள், ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட சுவிஸில் வாழ்க்கைச் செலவு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அங்கு கல்விக்கற்கும் தமிழ் மாணவர்கள், ”வீடுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வீட்டு வாடகைகள் பாரிய அளவில் உயர்ந்து வருகின்றன. இதனால் தமது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது.” என்றார்.