தமிழ் அரசியல் தலைமைகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் அவசர சந்திப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிதாக பதவியேற்றுள்ள இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவ‍ேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.

சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

இந் நிலையில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடனான இந்திய தூதரக அதிகாரிகளின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களமானது சூடு பிடித்துள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தீவு நாட்டின் அரசியலில் அதிகளவான தலையீடுகளை ஆரம்பித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இந்திய முதலீடுகள் மற்றும் இலங்கை மீதான இலங்கையின் தலையீடு போன்ற விடயங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடுமையான எதிர்ப்புக்களை விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.

இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பிரகாரம் மக்கள் விடுதலை முன்னணி தலைவரின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

புதிய தூதுவருடான சந்திப்பு ஆரோக்கியமாக இருந்தது – சுதந்திரன்

இந்திய புதிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டமைக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இங்குள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்திய மீனவர்கள் பிரச்சினை, சீனாவின் வருகை மூலமான கடலட்டை பண்னை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், இந்து சமூத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்பானது அவசியமாகும். எனவே சீனா இலங்கையில் வந்து நிலைகொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று பகிரங்கமாக கூறினோம்.

புதிய தூதுவருடனான இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமாகவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் அமைந்ததது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அது தொடர்பில் பேசப்படவில்லை என்றார்.

இதேவ‍ேளை, இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஏனைய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்த சந்திப்பானது சம்பிரதாயபூர்வமானது என்று கூறியுள்ளார்.

புதிய இந்திய தூதுவரின் யாழ்ப்பாணத்துக்கான முதல் விஜயம் இது என்றும், அதன் அடிப்படையில் வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்று உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து தன்னுடைய நிலைப்பாடு, இலங்கைக்கான இந்தியாவின் முக்கியத்துவம் போன்றவற்றை இந்திய தூதுவர் எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin