மயோட்டே (Mayotte) நாட்டில் பிரெஞ்சு பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
பிரான்ஸின் அரசியலமைப்பு மதுபரிசீலனை செய்வதன் மூலம் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தற்போது பிரான்ஸில் எந்தவொரு பகுதியிலும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள், இளம் பருவத்தை அடைந்த நிலையில் பிரெஞ்சு குடியுரிமையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
இந்த நிலையில், பிரான்சின் உள்துறை அமைச்சர் இது ஒரு தீவிரமான முடிவு என தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பதட்டங்கள்
2021 ஆம் ஆண்டில் மயோட்டே நாட்டில் பிறந்த 10,600 குழந்தைகளில் 46.5 வீதமானவர்கள் பிரெஞ்சு அல்லாத பெற்றோர்களை கொண்டுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 1985 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தப் பகுதியில் சனத்தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 310,000 பேரைக் கொண்ட ஒரு தீவான மயோட்டே பிரான்ஸின் ஏழ்மையான பகுதியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிரான்ஸை அண்மித்துள்ள கொமோரோஸை (Comoros) விட வருமானம் அதிகமுள்ள நாடாக மயோட்டே பார்க்கப்படுகிறது.
வறுமை காரணமாக தாயகத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கொமோரோஸ் பிரஜைகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை தேடி மயோட்டேக்கு பயணம் செய்கின்றனர்.
இந்த வருகை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மயோட்டே தீவில் வறுமை, குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களாக ஆர்வலர்கள் வேலைநிறுத்தம் மற்றும் வீதி மறியல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் முகாமை அகற்றுதல், பிரதேசத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வசிப்பிட அனுமதிகளை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியேற்ற சீர்திருத்தம்
இவ்வாறு குடியேறியவர்களை மயோட்டே நாட்டில் தங்குவதற்கு அனுமதித்த போதிலும், பிரான்ஸின் பிரதான நிலப்பரப்பில் தங்குவதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்கவில்லை.
இந்த நிலையில், மயோட்டேயில் அமைதியின்மையை நிவர்த்தி செய்வதற்கான சட்டமூலங்களின் தொகுப்பு வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே பிரான்ஸின் ஏனைய பகுதிகளை விட கடுமையான குடியுரிமை சட்டங்களுக்கு மயோட்டேவை உட்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தை பிரெஞ்சு குடியுரிமைக்கு தகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் தமது குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாக சட்டப்பூர்வமாக அங்கு வாசிக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு ஒரு விதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
குடியேற்றச் சட்டத்தின் பரந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் பெற்றோரின் குழந்தைகள் பிரெஞ்சு குடியுரிமையைப் பெறுவதற்கான அதன் நாடு தழுவிய விதிகளை அரசாங்கம் அண்மையில் கடுமையாக்கியது.