வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் இன்று சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர் ஒருவர் இருக்கும் புகைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சலசலபபை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
ஆலயம் அமைந்துள்ள பகுதி தங்களது இடம் என தேரர்கள் குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஆலய நிர்வாகத்தினர் மறுத்தனர்.
அத்துடன், இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பௌத்த தேரர்கள் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர்.
தேரர்களை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும், இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது.
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தனது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது.