U19 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியாவை 253 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த இந்தியா சிறப்பாக பந்துவீசியது, ஆனால் 254 என்ற இலக்கை துரத்தியடிக்க முடியவில்லை.

இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா 4வது முறையாக U19 கிரிக்கெட் உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பல்

தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற U19 கிரிக்கெட் உலக கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி மீண்டும் இந்தியர்களின் இதயங்களை உடைத்துவிட்டது.

இந்திய அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட தவறியதால் முக்கியமான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 253 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹ்லி பியர்ட்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.

ஐசிசி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா

சமீபகாலமாக ஆடவர்களுக்கான ஐசிசி போட்டிகளில் இந்தியாவை விட அவுஸ்திரேலிய அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அகமதாபாத்தில் நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இந்தியாவை தோல்வியடைச் செய்தது.

உலகக் கிண்ண போட்டிக்கு முன்னதாக லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியா ஆடவருக்கான ஒருநாள் உலகக் கிண்ணம், பெண்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம், இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றுடன் தற்போது U19 ஆண்கள் உலகக் கிண்ணத்தையும் வெற்றுள்ளது.

இது அவுஸ்திரேலியாவுக்கான நான்காவது U19 ஆடவர் உலகக் கிண்ணம் என்பதுடன், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களின் முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin