தேசிய மக்கள் சக்தியை (National People’s Power) தேர்தல்கள் ஆணைக்குழு பதிவு செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை முன்னிறுத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது எனவும் கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 103(2) பிரிவின்படி, ஒரு கட்சியின் வெவ்வேறு பிரிவுகளை தனித்தனி காட்சிகளாக பதிவு செய்வது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது அரசியலமைப்பின் மூலம் உறுதியளிக்கப்பட்ட சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமையை மீறுவதாக நாகானந்த கொடித்துவக்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு அரசியல் காட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி 2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சியாக செயற்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அத்துடன், மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமானால் அதில் மிகவும் விருப்பத்துக்குரிய வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவே காணப்படுகின்றார்.
இந்த பின்னணியிலே, அனுர தலைமையிலான குழுவின் இந்திய விஜயம் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தக் குழு டில்லி சென்றுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தி வருகின்றது.
இதன்படி, அனுர உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் ஒரு அரசியல் கட்சியாக எதிர்கால இருப்பு கருதி தமது காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறானதொரு நிலையில், சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தங்கள் செய்துள்ள மனுவானது அரசியல் இருப்பு குறித்த அச்சத்தின் வெளிப்பாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.