யாழ் வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பாடசாலை ஆசிரியர்கள் மாணவிகளிடம் வாக்கு மூலங்களை பெற்று, இளைஞனை கைது செய்து, நீதிமன்றில் மறுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் ஆசிரியர்கள், மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் அவர் பணித்துள்ளார்.
நேற்றையை தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை போக்குவரத்து விதி மீறியதாக வழிமறித்து வீதியில் வைத்து தாக்கியதுடன், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் தாக்கினார்கள் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவன் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
அதுதொடர்பில் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.