இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த 17 பேருக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவை மீதி மட்டக்களப்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தப் போரப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 17 பேர் தவிர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், மதகுருமார்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அரசடி மற்றும் கல்லடி இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.