தமிழரசு கட்சிக்குள் பிளவா?: முற்றிய கைகலப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் பொது மற்றும் மத்திய செயற்குழு கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எவ்வித தீர்மானங்களும் இன்றி முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருந்தனர்.

இதன்படி, முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

திருகோணமலையைச் சேர்ந்த குகதாச னுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என தீர்மானித்து பொதுச் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் அதற்கு ஒரு தரப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் வாக்கெடுப்பின் மூலம் பொதுச் செயலாளரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, வாக்கெடுப்பில் குகதாசனுக்கு 112 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் அளிக்கப்பட்டதாகவும், எட்டு மேலதிக வாக்குகளால் குகதாசன் பொதுச் செயலாளராக வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், அவரின் தெரிவை பலரும் ஏற்காத நிலையில் , வாக்கெடுப்பின் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவும் குகதாசனின் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தப்பட்ட வாக்கெடுப்பு பொதுச் செயலாளர் தெரிவிற்கானது அல்லவென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்றையக் கூட்டத்தில் கைகலப்பு, வார்த்தை மோதல் ஏற்பட்ட போதிலும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கட்சி தலைவர் தெரிவின்போது இரு தரப்பினர்களாக செயற்பட்ட நிலையில், கட்சியின் ஏனையப் பதவிகளை இருதரப்பினரும் ஒன்று சேர்ந்து நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, பல விட்டுக்கொடுப்புகளுக்கு பின்னர் மத்திய செயற்குழு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தது. பொதுச் செயலாளர் பதவி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குகதாசனுக்கு வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இது மத்திய செயற்குழுவில் ஏகமானதாக எடுக்கப்பட்ட தீர்மானம். மத்தியச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் பொதுச் செயற்குழுவில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.

அதனை முன்மொழிந்து, வழிமொழிந்த போது சில எதிர்ப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த பிரேரணையை பொதுச் சபை ஏற்றுக்கொள்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 112 பேர் ஆதரவாகவும், 104 எதிராகவும் வாக்களித்தனர். இதன் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நிர்வாக உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பொதுச் சபையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைவர் தெரிவிற்கு பின்னர், மத்திய செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஏனைய நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் ஒட்டுமொத்தமாக வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது கட்சியின் ஜனநாயகத்திற்கு மேலும் உந்துசக்தியாக அமையும். சண்டைப் பிடிக்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் அளவுக்குக் கூட நிலைமை மோசமாகச் சென்றது.

ஆனால் இறுதியில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.” என தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பொதுச் சபைக் கூட்டத்தின் பின்னர் நாளை இடம்பெறவிருந்த தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழரசு கட்சியின் புதியத் தலைவராக சி.சிறீதரன் நாளை பொறுப்பேற்கவிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 21ஆம் திகதி கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் சி.சிறீதரன் 47 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார்.

எவ்வாறாயினும், தலைவர் தெரிவின் போது தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இருதரப்பாக பிரிந்திருந்தனர். தற்போது ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின் போதும் கட்சி உறுப்பினர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Recommended For You

About the Author: admin