ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதாக கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
இந்த செலவுகள் மற்றும் ஜனாதிபதியின் ஏனைய செலவினங்களுக்காக வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு அப்பால் 2000 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி மேலதிகமாக ஒதுக்கியுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.
ஜனாதிபதி கடந்த 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை சுவிட்சர்லாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த வேளையிலேயே பாராளுமன்றத்தில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இப்போது, ஜனாதிபதியின் 19ஆவது வெளிநாட்டுப் பயணம் தொடர்பிலான விவரங்கள் குறித்து தெரியவருகிறது. இம்முறை அவர் அவுஸ்ரேலியாவை தெரிவுசெய்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் பெப்ரவரி 9 ஆம் திகதி நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது